ஆரியபட்டா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

இந்தியக் கணிதவியல் வரலாற்றில் இரண்டு ஆரியபட்டாக்கள் புகழ் பெற்றுள்ளார்கள். இவர்களுள் ஐந்தாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியிலும், ஆறாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் வாழ்ந்த ஆரியபட்டாவைப் பற்றியது இக் கட்டுரை. பிற்காலத்தில் வாழ்ந்த மற்ற ஆரியபட்டாவிலிருந்து வேறுபடுத்துவதற்காக இவரை முதலாம் ஆரியபட்டா அல்லது மூத்த ஆரியபட்டா எனவும் அழைப்பது உண்டு.
முதலாம் ஆரியபட்டா (கி.பி 476-550), இந்தியக் கணிதவியலின் செந்நெறிக் காலத்தைச் சேர்ந்த புகழ் பெற்ற கணிதவியலாளர், வானியலாளர்களுள் முதன்மையானவர் ஆவார். அவருடைய பிறப்பிடத்தைச் சரியாகத் தீர்மானிக்கத்தக்க வகையில் சான்றுகள் எதுவும் அகப்படவில்லை. எனினும் இவர் குசுமபுர என்னும் இடத்துக்குச் சென்று அங்கே உயர்கல்வி கற்றதாகவும், அங்கே வாழ்ந்ததாகவும் அறியப்படுகின்றது. இவருடைய நூலுக்கு உரையெழுதிய பாஸ்கரர், இவ்விடம், இன்றைய பாட்னாவான பாடலிபுத்திரமே என்கிறார். ஆரியபட்டா எழுதிய நூல்களுள், ஆரியபட்டீயம், ஆரியபட்ட சித்தாந்தம் என்பவை முக்கியமானவை.
பாடல் வடிவில் அமைந்துள்ள ஆரியபட்டீயம், கணிதவியல், வானியல் என்பன தொடர்பான கண்டுபிடிப்புக்கள் பலவற்றைக் கொண்டுள்ளது. தொடர்ந்த பல நூற்றாண்டுகளிலும் இந்தியக் கணிதவியலில் இந்நூல் செல்வாக்குச் செலுத்தியது. மிகச் சுருக்க வடிவில் இருந்த இந்நூலுக்கு, விரிவான உரைகளை இவரது மாணவரான முதலாம் பாஸ்கரரும், 15 ஆம் நூற்றாண்டில், ஆரியபட்டீய பாஷ்யம் என்ற பெயரில், நீலகண்ட சோமயாஜி என்பவரும் எழுதியுள்ளனர்.