வெள்ளொளிர்வு விளக்கு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நுண்ணிழை ஒன்றினூடு மின்சாரத்தைச் செலுத்தும்போது அது ஒளிர்கின்ற தோற்றப்பாட்டை ஆதாரமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட மின் விளக்கு, வெள்ளொளிர்வு விளக்கு (Incandescent Lamp) எனப்படுகின்றது. இது வெற்றிடமாக்கப்பட்ட அல்லது சடத்துவ வாயுக்களால் (Inert Gas) நிரப்பபட்ட கண்ணாடிக் குமிழொன்றினுள் பொருத்தப்பட்ட நுண்ணிழை ஒன்றைக் கொண்டது. இந்த நுண்ணிழையினூடாக வெளியிலிருந்து மின்சாரம் பாய்ச்சுவதற்கு ஏதுவாக இழையின் இரு முனைகளிலும் பொருத்தப்பட்ட மின் கடத்திகள் குமிழுக்கு வெளியே முடிவடைகின்றன.
ஆரம்ப காலங்களில், 1879 தொடக்கம் 1905 வரை இந்த நுண்ணிழைகள் பெரும்பாலும் காபனினாலேயே செய்யப்பட்டன. பின்னர் இது உலோகத்தினால் செய்யப்பட்டது. இக்காலத்தில் தங்ஸ்தன் உலோகமே இதற்குப் பயன்படுகின்றது.
நுண்ணிழையூடு மின்சாரம் பாயும்போது அது சூடாகி ஒளிர்கின்றது. இதன் மூலம் அது வெப்பத்தையும் ஒளியையும் வெளிவிடுகின்றது. ஆரம்ப கால விளக்குகளைவிட இக்காலத் தங்ஸ்தன் இழை விளக்குகள் முன்னேற்றமானவையாக இருந்தும், இவற்றால் வெளியிடப்படும் சக்தியில் 5% மட்டுமே ஒளிச் சக்தியாகும். இதனால் செலுத்தப்படும் மின்சாரத்தின் பெரும்பகுதி வெப்பமாக வீணாகி விடுகின்றது. இதனால் வெள்ளொளிர்வு விளக்கு செயல்திறன் மிகவும் குறைந்த ஒரு விளக்காகும்.
நுண்ணிழையின் வெப்பநிலை அதிகரிக்கும் போது கூடிய ஒளி வெளிவிடப்படுமாயினும், தங்ஸ்தன் ஆவியாகி நுண்ணிழை மேலும் மெல்லியதாகி விரைவிலேயே அறுந்து விடுகிறது. இதனால் மின் விளக்கின் ஆயுட் காலமும் குறைவதற்கு ஏதுவாகின்றது.
இன்று பல புதிய வகை விளக்குகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றுட் பல கூடிய செயல்திறனும், நீடித்து உழைக்கும் தன்மையும் கொண்டவை. எனினும், வெள்ளொளிர்வு விளக்குகள் இன்னும் பிரபலமாகவே உள்ளன. இவற்றுக்கான ஆரம்பச் செலவுகள் குறைவாக இருப்பதும், வேறு சில ஒளியியல் இயல்புகளும் இதற்குக் கரணங்களாகும். இன்றும் உலகில் மிக அதிகமாகப் பயன்பாட்டிலுள்ள மின் விளக்குகள் வெள்ளொளிர் விளக்குகளே.